TNPSC CCSE-IV | குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.


குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-4இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கும், கிராம நிர்வாக அலுவலர்  பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி ஆகும். இவற்றை தனித்தனியே நடத்தும் போது தொகுதி 4 பணிகளுக்கு சுமார் 15 லட்சம் விண்ணப்பதாரர்களும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு சுமார் 12 லட்சம் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கின்றனர். தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் விவரங்களைக் காணும்போது கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பிக்கும் 60 சதவிகித அதே விண்ணப்பதாரர்கள் தான் தொகுதி 4 தேர்வு பதவிகளுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.இரண்டு தேர்வுகளையும் தனித்தனியே நடத்தும்போது ஒவ்வொரு தேர்வுக்கும் சுமார் 15 கோடி ரூபாய் வரை செலவாகிறது. மேலும் தேர்வாணைய பணியாளர்களுடன் இணைந்து 32 மாவட்டங்களில் வருவாய்த்துறை, கருவூலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் காவல் துறை  பணியாளர்களும் இதர துறை பணியாளர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால் பணம், மனிதவளம், கால விரையமும் கூடுதலாக ஏற்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் இரண்டுமுறை விண்ணப்பக்கட்டணம் செலுத்தி தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியுள்ளதுடன் தனித்தனியே தேர்வுக்கும் தயார் செய்ய வேண்டியுள்ளது.மேற்படி தேர்வுகளை தனித்தனியே நடத்துவதால், விண்ணப்பதாரர்கள் இந்த இரண்டு பதவிகளில் தங்களுக்கு விருப்பமான பதவியை தேர்ந்தெடுக்க முடியாமல் கிடைக்கும் பதவியை தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் அடுத்த தேர்வுகளில் மற்ற பதவியை தேர்ந்தெடுப்பதால் ஏற்கனவே இவர்களால் நிரப்பப்பட்ட பணியிடம் காலியாகி, சம்பந்தப்பட்ட துறையும் பணித்தொய்வுக்குள்ளாகிறது. நடந்து முடிந்த தெரிவுகளில் கூர்நோக்கும் போது 20% பேர் ஒரு தெரிவிலிருந்து மற்றொரு தெரிவினை தேர்வு செய்வது தெரிய வருகிறது. இதனால் 20% காலிபணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. இவ்விரண்டு தெரிவுகளையும் ஒரே அறிவிக்கையில் வெளியிட்டு ஒரே தேர்வாக நடத்துவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் இரண்டு முறை தேர்வு எழுதுவது, இருமுறை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருவது, இருமுறை கலந்தாய்வுக்கு வருவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும் 6 மாத கால அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமின்றி தேர்வாணையத்திற்கும் கால தாமதம் மற்றும் பணவிரையம் தவிர்க்கப்படுகிறது. மேலும் மற்ற தெரிவுகளில் அந்தந்த பதவிக்கான பணிப்பயிற்சி அளிப்பதுபோல், கிராம நிர்வாக அலுவலர் பணிப்பயிற்சி தனியே அளிக்கப்படுகிறது. இதனால் இதுகுறித்த பகுதி போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதப்படுகிறது.மேற்கூறிய காரணங்களை தேர்வாணையம் கருத்திற்கொண்டு மேற்படி இரண்டு தெரிவுக்கான தேர்வுகளையும் பொதுவான ஒரே தேர்வு (CCSE-IV) நடத்துவதன் மூலம் முடிவுகளை விரைவில் வெளியிட்டு விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யலாம் என முடிவு செய்து அறிவிக்கை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. DOWNLOAD